பயங்கரவாதத்தை கொண்டாடியவனுக்கு சிறை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை கொண்டாடிய ஃபைஸ் ரஷீத் என்ற பொறியியல் மாணவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தது. கிழக்கு பெங்களூருவில் வசித்து வரும் ரஷீத், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வந்தார். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிடுவதற்காக ரஷீத் தனியாக ஒரு முகநூல் கணக்கை உருவாக்கி அதில் ஆத்திரமூட்டும் பிரிவினவாத பதிவுகளை வெளியிட்டார். பல இணைய பயனர்கள் இதுகுறித்து பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து 2019ம் ஆண்டு அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பேக்கரியில் வைத்து கைது செய்யப்பட்டார். தற்போது பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாரதம் முழுவதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதற்காகவும், தற்கொலைக் குண்டுத் தாக்குதலைக் கொண்டாடியதற்காகவும் இதேபோல பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த 14 பிப்ரவரி 2019 அன்று, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த, அடில் அகமது தார் என்ற பயங்கரவாதி, சுமார் 40 வீரர்கள் பயணித்த சி.ஆர்.பி.எப் பேருந்தின் மீது 300 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் ஏற்றிய வாகனத்தில் மோதினான். இந்த மோதலில் பேருந்தும் வாகனமும் வெடித்து சிதறியதில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையைத் தாண்டி பாலகோட் வான்வழித் தாக்குதல்களை பாரதம் நடத்தியது, இதன் விளைவாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.