சிதம்பரத்திலுள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலை நிர்வகித்துவரும் தீட்சிதர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தி.மு.க அரசு பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், கடந்த சில வாரங்களாகக் குழந்தைத் திருமணப் புகாரில் அவர்கள் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உச்ச நீதிமன்றம், குழந்தைகள் நல ஆணைய வழிகாட்டுதல்களை மீறி தீட்சிதர்களின் குழந்தைகளை விசாரணை செய்வது குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மையத்தில் தீட்சிதர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசு உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கும் தீட்சிதர்கள் புகார் அனுப்பியுள்ளனர். அந்த புகார் மனுவில், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள், அர்ச்சகர்களாகவும், அறங்காவலர்களாகவும் உள்ளனர். எங்கள் சமுதாயத்தில் குழந்தை திருமணம் நடந்ததாக ஒரு பட்டியலை எங்களுக்கு எதிராக செயல்படும் அமைப்பு சமூக நல அலுவலரிடம் கொடுத்துள்ளனர். குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, பெற்றோர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டனர். பெண் குழந்தைகளை உச்ச நீதிமன்றம் மற்றும் குழந்தை நல ஆணையம் கூறிய வழிமுறைகளை மீறி விசாரணை என்ற பெயரில் பரிசோதனைகளுக்கு உட்படுத்துகின்றனர். பெண் குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி பெற்றோர்களை கைது செய்கின்றனர். பெண் குழந்தைகளின் தாயாரை காவல் நிலையத்திற்கு இரவு 11:30 மணி வரை வைத்து விசாரணை நடத்துகின்றனர். இந்த விசாரணையின்போது மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளன. பெண் குழந்தைகளின் நலமும் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இளம் சிறார்களை விசாரணை என்ற பெயரில் தமிழக காவல்துறை குழந்தை நல ஆணைய வழிமுறைகளை கடைபிடிக்காமல் விசாரணைக்கு உட்படுத்துவார்கள் என்று அச்சப்படுகிறோம். எனவே இந்த விஷயத்தில் நேர்மையான விசாரணை தேவை. நடுநிலையான, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்பு விசாரித்தால் தான் நேர்மையான விசாரணை நடைபெறும். காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் விசாரணை செய்யவும் அத்தகைய மனித உரிமை மீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக காவல்துறை தலைவருக்கும், உள்துறை செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்து குழந்தை நல உரிமைகளை காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.