கிறிஸ்தவ பாதிரி கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் ஹரிஹர்கஞ் சர்ச்சில், ஹிந்துக்களை சட்டவிரோதமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட விஜய் மாசிஹ் என்ற கிறிஸ்தவ போதகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட இந்த பாதிரி மீது, இரண்டரை மாதங்களுக்கு முன்பு இதேபோல ஹிந்துக்களை சட்டவிரோதமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஹிந்துக்களின் பல ஆதார் அட்டைகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ‘அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரி, ஹரிஹர்கஞ்ச் சர்ச்சில் சுமார் 50 பேர் அடங்கிய ஒரு ஹிந்துக் குழுவை சட்டவிரோதமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாக ஒப்புக்கொண்டார். காவல்துறையினரால் அங்கு மீட்கப்பட்ட ஆதார் அட்டைகள், மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்களுக்கு சொந்தமானது என்றும், கிறிஸ்தவ மதத்தை குறித்து மூளைசலவை செய்து அவர்களை மதமாற்றம் செய்த பிறகு அவர்களின் அடையாளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் வாக்குமூலம் அளித்தார். இரண்டரை மாதங்களுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட வழக்கில் இவர் மீது, பொருளாதார ரீதியாகப் போராடும் ஹிந்துக்களைக் குறிவைத்து பணம் மற்றும் கவர்ச்சி மூலம் கிறிஸ்தவர்களாக மாற்றியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த மதமாற்ற மோசடியில் இவருடன் சேர்த்து பலரும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள்’ என காவல்துறை சிறப்பு அதிகாரிவீர் சிங் தெரிவித்தார். ஃபதேபூரில் ஹிந்துக்களை சட்டவிரோதமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் வழக்கு பதிவு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இங்குள்ள இ.சி.ஐ சர்ச் கட்டடத்தில் வைத்து ஹிந்துக்களை பெருமளவில் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்த வழக்கில் ஒரு பாதிரி உட்பட 26 பேரை ஃபதேபூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் 10 பெண்கள் உட்பட 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.