அகிலேஷுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கடந்த மாதம் செப்டம்பர் 29 அன்று சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாட்டில் 2022 தேர்தலில் கட்சியின் தோல்வியை விளக்குவதற்காக பரபரப்பான ஒரு கூற்றை வெளியிட்டார். அதில், “இந்த ஆண்டு உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.கவின் உத்தரவின் பேரில் அனைத்து 403 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள யாதவர்கள் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 20,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே நீக்கியது” என குறை கூறினார். எனினும், அவரது கட்சியோ அல்லது அகிலேஷ் யாதவோ இந்த குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையத்திடம் எந்த புகாரையும் ஆதாரங்களையும் இதுவரை அளிக்கவில்லை. இதனிடையே, இந்த குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் அகிலேஷ் யாதவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, வரும் நவம்பர் 10, 2022க்குள் அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் 1951 ஆகியவை வாக்காளர் பதிவு, திருத்தம், இறுதிப் பட்டியலின் தூய்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் தெரிந்தே தவறான அறிவிப்பு வெளியிடுதல், இரு வகுப்புகளுக்கு இடையே பகைமையை ஊக்குவிப்பது உட்பட இத்தகைய தேவையற்ற குறுக்கீடுகளுக்கு அபராதம் மற்றும் குற்றப் பொறுப்புகளுக்கான விதிகளையும் உள்ளடக்கியது என சுட்டிக்காட்டியுள்ளது.