ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

உத்தரப் பிரதேசத்தில் 2019ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர் ஆசம் கான் அவதூறாகப் பேசினார். இந்த வழக்கை விசாரித்த ராம்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், இரு தரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் ஆசம் கான் பேசியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் ஆசம் கான் ஜாமீன் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசம் கானின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. எனினும், தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஆசம் கான் தெரிவித்துள்ளார். ஆசம் கான் மீது நில அபகரிப்பு, ஊழல் என 87 வழக்குகள் இதுவரை பதியப்பட்டுள்ளன. நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் 27 மாதங்கள் சிறையில் இருந்த ஆசம் கானுக்கு கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.