மேற்கு வங்கத்தில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு சட்டவிரோதமாக உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ கடந்த ஏப்ரல் 7ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியது. இந்த வழக்கில் தற்போது 12 பேருக்கு எதிராக சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொல்கத்தாவின் அலிப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குற்றப் பத்திரிகையில், மேற்கு வங்க மத்திய பள்ளிப் பணிகள் ஆணைய முன்னாள் ஆலோசகர் சாந்தி பிரசாத் சின்ஹா, மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரிய தற்காலிக குழுவின் முன்னாள் தலைவர் கல்யாண்மோய் கங்குலி உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதே ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளது. மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது உதவியாளரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.