கோவையில் முழு அடைப்பு போராட்டம்

பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலைதூக்கியுள்ளதை, காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது. இதில் இறந்த ஜமேசா முபின் என்ற நபர் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். தற்போதைய தமிழக அரசு, பயங்கரவாதத்தை கண்டும் காணாமலும் இருக்கிறது என்பது யதார்த்தம். பயங்கரவாதத்தின் ஆணிவேரை அகற்றும் வரை ஆபத்து நம்மை சூழ்ந்தே இருக்கும் என்பதை மனதில் கொண்டு தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு 1.5 டன் வெடிமருந்து இருந்ததாக தகவல் வந்துள்ளது. இதில் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.ஐ.ஏவுடன் இணைந்து தமிழக காவல்துறை செயல்பட வேண்டும். தமிழக அரசின் மெத்தனப்போக்கையும், பயங்கரவாதத்தை மூடி மறைக்க வேண்டும் என்ற அதன் எண்ணத்தை கண்டித்தும் கோவையை பயங்கரவாதிகளிடமிருந்து இருக்க காக்க வலியுறுத்தியும் வரும் அக்டோபர் 31ம் தேதி கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் கோவை மாநகர் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அ.தி.மு.க, கம்யூனிஸ்டுகள், பா.ம.க, ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளும் முஸ்லிம் மக்களும் இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார்.