நோட்டீஸ் வழங்க அவகாசம்

பொதுமக்கள், வணிகர்கள், தொழில்துறையினர், கட்சிகள், இயக்கங்கள் என அனைவரின் எதிர்ப்பையும் மீறி வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கான மின்கட்டணத்தை கடந்த செப்டம்பர் 10 முதல் உயர்த்த தமிழக அரசு உயர்த்தியது. மேலும், ஒரு வீட்டுக்கு ஒருஇணைப்புக்கு மேல் மின்இணைப்பு வைத்திருந்தால், ஒரு இணைப்புக்கு மட்டும்தான் அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானியம் வழங்கப்படும். மற்ற இணைப்புகளுக்கு இவை ரத்து செய்யப்படுவதுடன் அந்த மின்இணைப்புக்கான கட்டணமும் பொது பயன்பாட்டுக்கான கட்டணமாக மாற்றப்படும் என தெரிவித்தது. இதுதொடர்பாக, 2 வாரத்துக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பு வைத்துள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குமாறு மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுதொடர்பாக மின்வாரியத்துக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. குறிப்பாக, வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளுக்கு அதற்கான ஒப்பந்த ஆவணங்களை வாங்க வேண்டுமா, கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் தனித்தனி குடும்ப அட்டை வைத்திருந்தால் அந்தக் குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் இருந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் தரப்பில் விளக்கம் கோரப்பட்டது. இதைத்தவிர, வடகிழக்குப் பருவ மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், பண்டிகை காலம் ஆகியவற்றால் 2 வாரத்துக்குள் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்க போதியநேரம் இல்லாததால் நோட்டீஸ் வழங்க காலஅவகாசம் வழங்கவேண்டும் என மின்வாரிய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று நோட்டீஸ் வழங்குவதற்கான காலஅவகாசம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வரை நீட்டித்து மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.