பல்கலைக் கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, கேரளத்தில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட 9 பல்கலைக் கழக துணைவேந்தர்களையும் அக்டோபர் 24 காலை 11.30 மணிக்குள் பதவி விலகுமாறு கேரள ஆளுநர் ஆரீப் முகமதுகான் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து துணைவேந்தர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகம்மது கான் துணைவேந்தர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். அதில், “துணைவேந்தர் பதவியில் நீடிப்பதற்கு தங்களுக்கு உள்ள உரிமையை 9 துணைவேந்தர்களும் வரும் நவம்பர் 3ம் தேதி மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும். அவர்களது நியமனம் சட்டவிரோதமானது அல்ல என அவர்கள் நிரூபிக்க வேண்டும். இதற்கான நோட்டீஸ் அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு இ மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது” என கேரள ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.