கோவை உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேட்டில் பழமை வாய்ந்த சங்கமேஸ்வரர் கோயில் அருகே ஒரு மாருதி கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில், தீ விபத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்ற முஸ்லிம் நபர் உயிரிழந்தார். தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது, காரின் உடைந்த பாகங்களுடன் அங்கு கிலோ கணக்கில் கொட்டிக்கிடந்த ஏராளமான ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இதனால், இது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் ஒரு பயங்கரவாத முயற்சி என சந்தேகம் எழுந்தது. உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டன. ஜமேஷா முபின் வீட்டருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சம்பவத்துக்கு முதல் நாள் இரவு, ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 மர்ம நபர்கள் அந்த வீட்டில் இருந்து ஒரு பெரிய மூட்டையை தூக்கிச் சென்று காரில் ஏற்றும் காட்சி பதிவாகியிருந்ததை கண்டறிந்தனர். அந்த மூட்டையில் வெடிமருந்துகள் இருந்திருக்கலாம் என சந்தேகிகிப்பதுடன் அதை காரில் எடுத்துச் சென்று வேறு எங்காவது பதுக்கி வைத்துள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். ஜமேஷா முபினுடன் கடந்த சில ஆண்டுகளாக தொடர்பில் இருந்த நபர்கள், அவரது செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். அவ்வகையில் ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதன் இறுதியில் உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.