குழந்தை திருமணங்கள் நடத்தி வைத்ததாக, சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிராக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருமணங்கள் நடத்தி வைத்த தீட்சிதர்களை கைது செய்தனர். இரவோடு இரவாக கைதுசெய்யும் இந்த அராஜகக் கைது நடவடிக்கைகளை கண்டித்து, தீட்சிதர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கும் காவல்துறையினர் தனியாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதையடுத்து, முன்ஜாமின் கோரி, 51 தீட்சிதர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்கள் எந்த வழக்கில் காவல்துறையால் தேடப்படுகின்றனர் என்ற விபரங்களுடன் புதிதாக மனுத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட இருவரது முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், மற்ற 49 பேரையும் நவம்பர் 1 வரை கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.