உயரும் தமிழகத்தின் கடன் சுமை

கடந்த நிதியாண்டில், தமிழகத்தின் கடன்சுமை 22.43 சதவிகிதம் உயர்ந்து 5,18,796 கோடி ரூபாய் தொட்டுள்ளது என இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சி.ஏ.ஜி அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருவாய் செலவினத்தை ஈடு செய்வதற்காக வாங்கப்படும் கடனை தவிர்க்க, மூலதன ரசீதுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சொந்த வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிதி ஆதாரத்தை உருவாக்க உடனடி நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நிதியாண்டில் தமிழகத்தின் மூலதன செலவினகங்களின் அளவு 36,902 கோடி ரூபாய், இதைச் சமாளிக்க மாநில அரசு வாங்கிய கடன்கள் மூலம் நிதியியல் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் கடன் அளவு 22.43 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் கடன் மற்றும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் 26.94 சதவீதமாக உள்ளது. இது, தமிழக நிதிநிலை பொறுப்பு சட்டம் (TNFR) 2003ன்படி, 25.20 சதவீதமாக இருக்க வேண்டும். மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடனான 633.99 கோடி ரூபாயும் இதனுடன் சேர்ந்தால் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் 27.30 சதவீதமாக உயரும். வருடாந்திர வருவாய் பற்றாக்குறை அளவு 2017ம் நிதியாண்டில் 12,964 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இது 62,326 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வருடாந்திர வருவாய் பற்றாக்குறை அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் TNFR இலக்கான 25.20 சதவீதத்தை அடைவது மிகவும் கடினம். வருவாய் வரவுகள், வருவாய் செலவினங்களைக் கூட ஈடுசெய்ய முடியாததால் வருவாய் பற்றாக்குறை இருப்பது கவலையளிக்கிறது. மூலதன வரவுகளின் ஒரு பகுதி வருவாய் செலவினங்களைச் சமாளிக்க பயன்படுத்தப்பட்டது, மூலதன வளங்களின் இருப்பைக் குறைத்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், தமிழக அரசு தனது வருவாய் பற்றாக்குறையைத் தீர்க்கக் கூடுதலான வருவாய் ஈர்க்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளது. அதற்கு தி.மு.க அரசு சரியான வழிகளை காணாத பட்சத்தில் அது மக்கள் தலையில் தான் கூடுதல் சுமையாக விழும் என்பதில் ஐயமில்லை. விலைவாசி ஏற்றங்கள் ஒருபுறமிருக்க, தமிழக அரசு, வீட்டுவரி உட்பட அனைத்து வரிகளையும் மின்சார கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் ஏற்கனவே, விண்ணுயர உயர்த்திவிட்டது. இதனால், மக்கள் விழிபிதுங்கி நிற்கும் சூழலில் இந்த பிரச்சனையை சமாளீக்க தமிழக நிதியமைச்சரும் அவருக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்களும் இவர்களுக்கு தலைமை தாங்கும் முதல்வரும் என்ன செய்யப்போகிறார்கள்?