டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, “மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பொது மக்களுக்கு ஜன் தன் வங்கி கணக்குகளின் வாயிலாக ரூ. 25 லட்சம் கோடியை பரிமாற்றம் செய்துள்ளது. மொத்தமுள்ள 50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பாதியளவு பெண்களால் தொடங்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மானிய உதவிகள் ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூலமாக வழங்கப்படுகின்றன. இந்த கணக்குகளில் ஏழைகள் ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு டெபாசிட் செய்து தங்களது பாதுகாப்பான நிதி சூழலை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். நேரடி மானியத் திட்டத்தை அமல்படுத்தியதன் விளைவாக 4 கோடி போலி ரேஷன் கார்டுகளும், 4 கோடி தவறான எல்.பி.ஜி சிலிண்டர் இணைப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மத்திய அரசு ஏழைகளுக்கு ஒதுக்கும் 100 ரூபாயில் ஒரு பைசா கூட குறையாமல் முழு தொகையும் அவர்களை சென்றடைகிறது. இது ஒரு மாபெரும் சாதனை. இதேபோன்று, பட்டியலின பழங்குடியின் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையையும் அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்த மத்திய அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.