ஆக்ராவை சேர்ந்த ஷூபம் கர்க் என்ற மாணவர், சென்னை ஐ.ஐ.டியில் பிடெக் மற்றும் முதுகலை படித்த பட்டதாரி. இவர், இந்த ஆண்டு செப்டம்பரில் தனது பி.ஹெச்.டி படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஆர்டமோன் பசிபிக் நெடுஞ்சாலை அருகே கடந்த அக்டோபர் 6ம் தேதி, ஷுபம் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ஆஸ்திரேலிய நபரால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். கத்தியால் பல இடங்களில் குத்தப்பட்ட அவரை சில உள்ளூர்வாசிகள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. நோர்வூட், ஷுபம் கர்க்கை மிரட்டி பணம் மற்றும் செல்போனை கேட்டதாகவும் அதனை தடுக்க முயன்றபோது, நோர்வூட் அவரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தாக்கியவர் யார் என்று ஷுபமுக்கு தெரியாது என்றும், இது இனவெறி தாக்குதல் என சந்தேகிப்பதாகவும் ஷுபமின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். விசா பிரச்சனைகள் காரணமாக ஆக்ராவில் உள்ள அவரது குடும்பத்தினரால் அவரை உடனடியாக சென்று பார்க்க முடியவில்லை. அவர்கள் இதுதொடர்பாக இந்திய தூதரகம் மற்றும் ஆஸ்திரேலிய தூதரகத்திடமும் பேசி வருகின்றனர்.இந்திய தூதரகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.