வழிபாட்டுத் தலங்களுக்கான சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. உஸ்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித், நீதிபதி ஆர் பட் மற்றும் நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவேதி வாதிடுகையில், ‘ஆகஸ்ட் 15, 1947க்கு முன்னர் நடைபெற்ற வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புனித யாத்திரை தலங்கள் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான பரிகாரங்களைத்தேட தடை செய்யும் இந்த வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991ல் நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நிலைநாட்டிய அயோத்தி தீர்ப்பால் அவை எடுபடாததால், சில கூடுதல் கேள்விகள் பரிசீலிக்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டார். இதற்கான மத்திய அரசின் பதில் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், மேலும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து அக்டோபர் 31ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டதுடன் இந்த வழக்கு நவம்பர் 14 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்குள், தற்போதைய தலைமை நீதிபதி பணி ஓய்வு பெற்றிருப்பார். நீதிபதி டி ஒய் சந்திரசூட் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருப்பார். அப்போது நீதிபதி சந்திரசூட் தான் இந்தச் சட்டத்தின் சவாலை வழக்கை விசாரிப்பதற்கான புதிய அமர்வை முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.