கர்நாடகாவைச் சேர்ந்த சயதா அம்ப்ரீன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கடந்த ஜனவரியில், எங்கள் சமூக தலைவரான காஸி அலுவலகத்தில் இருந்து, எனக்கு ஒரு கடிதம் வந்தது. என் கணவர் சார்பில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், என் மீது தெளிவற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் இந்த திருமண வாழ்க்கை நீடிக்காது என்றும், இந்த திருமண பந்தத்தில் இருந்து நான் விடுவிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபோல ஒரே ஒரு கடிதம் வாயிலாக திருமண பந்தத்தை முறித்துக் கொள்வது, ‘தலாக் – இ – கினயா’ என்றும், ‘தலாக் – இ – பெயின்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இது போன்ற ஒருதலைப்பட்சமான, சட்டத்திற்கு புறம்பான விவாகரத்து நடைமுறைகளுக்கு இமாம், மௌல்வி, காஸி போன்ற மதத் தலைவர்கள் துணை போகின்றனர். இது முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயல். இதனால், பல முஸ்லிம் பெண்கள் உடல், பொருள், சமூக, பொருளாதார, உணர்வு ரீதியான பல பிரஸ்சனைகளுக்கும் ஆளாகின்றனர். தன்னிச்சையான, பகுத்தறிவற்ற இது போன்ற உரிமை மீறல் நடவடிக்கைகள் செல்லுபடியாகாதது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அறிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், ஜே.பி.பார்திவாலா அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், இந்த மனு மீது பதில் அளிக்கும்படி மத்திய சட்டத்துறை, சிறுபான்மையினர் விவகாரத் துறைகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முஸ்லிம் சமூகத்தில் மனைவியை அவரது கணவர், மூன்று முறை தலாக் கூறி, ஒருதலைப்பட்சமாக விவாகரத்து செய்யும் நடைமுறையை உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி மத்திய அரசு சட்டம் இயற்றி தடை செய்துள்ளது. ஆனால், சட்டத்தை மீறி அதனை முஸ்லிம் ஆண்கள் பலர் செயல்படுத்தி வருகின்றனர். பாதிக்கப்படும் பெண்கள் அளிக்கும் புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செயப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக இந்த நடைமுறை வேறு பெயர்களில் தொடர்வதாக புகார்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.