ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்த எமிரேட்ஸ் தூதரக பார்சல்களில் இருந்து, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் 2020ல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், பெங்களூரைச் சேர்ந்த சந்தீப் நாயர், கேரள முதல்வரின் முன்னாள் செயலர் எம்.சிவசங்கர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்வப்னா சுரேஷ், இந்த தங்கக் கடத்தல் உட்பட பினராயி விஜயன், சிவசங்கர் உள்ளிட்டோர் குறித்த பல திடுக்கிடும் உண்மைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்த கடத்தல் விவகாரத்தில் அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, சுங்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கை கேரள நீதிமன்றத்தில் இருந்து கர்நாடக நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், எஸ்.ஆர்.பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து பதில் அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் பினராயி விஜயனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.