கிறிஸ்தவ பள்ளிகளில் ஹிஜாப் தடை

ஈரானில் உள்ள பெண்கள் ஹிஜாபுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் வேளையில், கேரளாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள கத்தோலிக்க பள்ளிகளுக்கு எதிராக முஸ்லிம் யூத் லீக் (MYL), முஸ்லீம் மாணவர் கூட்டமைப்பு (MSF), மற்றும் ஜமாத் இ இஸ்லாமி ஹிந்தின் மாணவர் பிரிவான மாணவர்கள் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஆகிய முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கோழிக்கோட்டில் உள்ள அப்போஸ்தலிக் கார்மல் தென் மாகாணம் என்ற கிறிஸ்தவ சபையால் நடத்தப்படும் பிராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹிஜாப் அணிவதைத் தடைசெய்ததால் எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பிராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், இது சீருடையின் ஒரு பகுதியாக இல்லாததால் இதனை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. கேரளாவில் ஹிஜாபை பள்ளி வளாகத்தில் தடை செய்த இரண்டாவது கத்தோலிக்க பள்ளி இதுவாகும். முன்னதாக, இதே கிறிஸ்தவ சபையால் நடத்தப்படும் கோழிக்கோடு பள்ளியும், பள்ளி வளாகத்தில் ஹிஜாபை தடை செய்தது. இதனால் அந்த பள்ளிக்கு எதிராகவும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. முன்னதாக கடந்த 26 ஆகஸ்ட் 2022 அன்று, தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா உட்பட பல முஸ்லிம் அமைப்புகள் இதே காரணத்துக்காக ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தன, இதன் விளைவாக பள்ளிக்கு வெளியே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.