கொள்கைகளை கைவிட்ட முதல்வர்

ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தபோது, ரயில்வே வேலை வழங்க நிலங்களை லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மூத்த மகள் மிசா பாரதி உட்பட 14 பேர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ தெரிவித்தது. ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், ”அந்த வழக்கில் எதுவுமே வெளியாகவில்லை. நான் இப்போது லாலுவுடன் தான் கூட்டணியில் இருக்கிறேன். சி.பி.ஐ. தங்கள் ஆசைக்கேற்ப செயல்படுகிறது” என்று கூறினார். இதனையடுத்து நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், “நிதிஷ்குமார், தான் வாழ்நாளில் கட்டிக்காப்பாற்றிவந்த முக்கிய கொள்கைகளை ஊழல் வழக்கில் சிக்கியுள்ள லாலுவையும், அவரது குடும்பத்தையும் ஆதரித்து பேசுவதன் மூலம் சமரசம் செய்து கொண்டுள்ளார். 2017ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார். ஆனால் அவரே இப்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது. நிதிஷ்குமார் சட்டத்தை செயல்பட விட வேண்டும். அதில் குறுக்கிடக்கூடாது” என கூறினார்.