மற்றொரு மொழிப்போர் சாத்தியமா?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த மாதம் அளித்துள்ள அறிக்கையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் ஹிந்தி மற்றும் உள்ளூர் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். ஹிந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

ஆனால், சமீபத்தில் ஹிந்தி பிரச்சார சபா வெளியிட்டுள்ள செய்தியில், “தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி கற்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஹிந்தி கற்பவர்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் மட்டும் 1,31,592 பேர் தமிழகத்தில் ஹிந்தி கற்கின்றனர். இதில் 34,589 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 2021ல் தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி கற்போர் எண்ணிக்கை 3.17 லட்சமாக இருந்த நிலையில் 2022ல் இது 3.28 லட்சமாக உயர்ந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஸ்டாலின் கூறுவது போல மொழி போர் என்பது தமிழகத்தில் எவ்வகையிலும் தற்போது சாத்தியமில்லாத ஒன்று. மக்கள் அறியாமையில் இருந்த அந்த காலம் மலையேறிவிட்டது. இது 1960 அல்ல 2022 என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

மேலும், ஹிந்தியை மட்டும் நாடாளுமன்றக் குழு வலியுறுத்தவில்லை அல்லது அதனை திணிக்கவில்லை. மாறாக, பிராந்திய மொழிகளுக்கும் சமபங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அன்னிய நாட்டு மொழியான ஆங்கிலத்தை தவிர்க்க மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. தி.மு.கவினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளை கற்பித்துவிட்டு தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை வேண்டாம், ஹிந்தி எதிர்ப்பு என கூறிக்கொண்டு அப்பாவி ஏழை மக்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மாற்று மொழிகள் கற்பதை தடுத்து வருவதை இந்த இணைய யுகத்தில் மக்கள் அறியாமல் இல்லை.

மேலும், இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தி.மு.கவின் எம்.பி ஜகத்ரட்சகன், காங்கிரசை சேர்ந்த எம்.பிகள் கீதா கோரா, கவிதா மலோத், கே.சி வேணுகோபால், நரன் பாய் ரத்வா, சமாஜ்வாதி கட்சியின் எஸ்.டி. ஹசன், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி சங்கீதா ஆசாத், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி கே. கேசவ ராவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முதலில் தனது கட்சியின் எம்.பி மற்றும் கூட்டணி எம்.பிக்களிடம் ஏன் ஹிந்தியை பரிந்துரைத்தீர்கள் என கேள்வி கேட்காத ஸ்டாலின், நேரடியாக மத்திய அரசை கண்டித்து அறிக்கை விடுப்பது என்பது அரசியல் தவிர வேறு இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

மதிமுகன்