ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து பெறும் எரிவாயுவை பெரிதும் நம்பியுள்ளன. ரஷ்யாவில் இருந்து பால்டிக் கடலுக்கு அடியில் குழாய் மூலம் எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2′ ஆகிய இரண்டு திட்டங்கள் மூலம் ரஷ்யாவில் இருந்து கடல் வழியாக மிகப்பெரிய குழாய் மூலம் ஜெர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயு பின்னர் அங்கிருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து ‘நார்ட் ஸ்ட்ரீம் 1’ குழாய் மூலம் எண்ணெய் அனுப்புவதை ரஷ்யா நிறுத்தியது. ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ திட்டம் நிறைவடைந்தபோதும் அந்த குழாய்கள் மூலம் ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு இதுவரை எரிவாயு அனுப்பப்படவில்லை. இதனிடையே, பால்டிக் கடலில் டென்மார்க் ஸ்வீடன் கடல்பரப்பில் கடந்த மாதம் 26ம் தேதி நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்தது. கடலுக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஸ்வீடன் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மூலம் எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த எரிவாயு குழாய்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், பால்டிக் கடலின் பொர்ஹொலம் தீவு பகுதியில் கடலுக்கு அடியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதன் பின்னர்தான் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. அதே நாளில், அதே நேரத்தில், அந்த இடம் அருகே அமெரிக்காவின் விமானப்படைக்கு சொந்தமான பி 8ஏ என்ற உளவு விமானம் பறந்து சென்றுள்ளது. அதற்கான தரவுகள் தற்போது கிடைத்துள்ளது. இதன் மூலம் நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 தொகுப்பின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருகலாம், அந்த தாக்குதல் பின்னனியில் ரஷ்யா இருக்கலாம் என திசை திருப்ப முயற்சித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எரிவாயு குழாய் கசிவுக்கும் உளவு விமான பயணத்திற்கும் சம்மந்தம் இல்லை, வழக்கமான உளவு பணிகளையே பி 8ஏ விமானம் செய்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.