கோவை, ராம்நகர் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ‘மோடி 2.0’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், “பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து வருவது நன்றாக தெரிகிறது. தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள், மக்களின் உணர்வுகளுக்கு எதிரான, தவறான மற்றும் சட்ட விரோதமான கருத்துக்களை பேசி வருகின்றனர். தி.மு.கவினரின் இந்த நடவடிக்கைகளை கண்டித்த பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, தி.மு.க அரசின் ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது. இத்தகைய நடவடிக்கைகளை பா.ஜ.க கண்டிக்கிறது. விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க ஏதுவாக, மத்திய அரசு வேளாண் காடுகளை அதிகரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில், சதுப்பு நில பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனப்பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த, இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் அது தற்போது 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது” என தெரிவித்தார்.