தமிழக பா.ஜ.க செயலாளரும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன், “ஹிந்து மதம் என்ற ஒன்று கிடையாது என்று திருமாவளவன், வெற்றிமாறன், கமல், சீமான் பேசுவது சுத்த அபத்தம். ஒருவேளை அவர்கள் சொல்லும் வாதம் ஏற்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஏற்கப்பட்டால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களைவிட, சைவம் மற்றும் வைணவ மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். எனவே, சைவம் மற்றும் வைணவ மக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கொடுக்க இவர்கள் ஒப்பு கொள்வார்களா? ஹிந்து மதம் என்ற ஒன்று இல்லையென்றால், இடஒதுக்கீடு என்ற அடிப்படை கட்டமைப்பே தகர்ந்து போகும். இந்த விபரீதம் புரியாமல் அவர்கள் பேசுகின்றனர். பாரதத்தில் பெரும்பான்மையை உள்ளடக்கியது ஹிந்து மதம். அதுவே இல்லை என்றால், சிறுபான்மை இனம் என்பதே இல்லாமல் போகும். தாங்கள் சிறுபான்மை இனத்தை சேர்ந்தோர் என்று, கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் கூற முடியாது. ஹிந்து மதம் ஜாதியை கற்பித்தது என்ற காரணத்தால் உருவாக்கப்பட்டது, இட ஒதுக்கீட்டு கொள்கை. ஹிந்து மதமே இல்லாத நிலையில், ஜாதிகளும் இல்லாமல் போகும். அப்படியென்றால், இட ஒதுக்கீட்டு கொள்கையும் அதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களும் இல்லாமல் போகும். ஹிந்து என்ற மதம் இல்லை என்றால், ஹிந்து அறநிலைய துறைக்கு என்ன வேலை அதன் கீழ் வரும் ஆயிரக்கணக்கான ஹிந்து கோயில்களின் நிர்வாகம், சொத்துக்கள் என்னாகும்? அதே நிலை தான், சிறுபான்மை இனத்துக்கும் ஏற்படும். சிறுபான்மையின நலத் துறையின் கீழ் வரும் ‘வக்பு’ வாரியத்தின் கட்டுப்பாடில் இருக்கும் மசூதி மற்றும் பள்ளிவாசல்கள் நிலையும் குழப்பமாகும். அம்பேத்கர் கொள்கைக்கு முரணாக செல்கிறார் திருமாவளவன். ‘யார் கிறிஸ்துவர் இல்லையோ, யார் முஸ்லிம் இல்லையோ; மற்ற அனைவருமே பெரும்பான்மை மதமான ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள்’ என்பதை தெளிவாக கூறியிருக்கிறார் அம்பேத்கர். தான் இயற்றிய அரசியல் சாசன சட்டத்திலும் இதை கூறி இருக்கிறார். சமண, சீக்கிய, புத்த சமயங்களையும் ஹிந்து மதத்தின் கீழ் தான் அம்பேத்கர் கொண்டு வந்துள்ளார். ஏதோ ஒன்றை சொல்லி, மக்களிடையே குழப்பமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக, திட்டம் போட்டு இப்படி அபத்தமாக பேசி வருகின்றனர்” என கூறியுள்ளார்.