மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில், பா.ஜ.க சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன், “பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு அளிக்கின்றனர். இதனால் வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். நீலகிரி தி.மு.க எம்.பி ஆ. ராசாவின் பேச்சு அநாகரிகமானது. அதனால் மக்கள் கொந்தளித்துள்ளனர். அவரது அவதூறு பேச்சை கண்டித்து நடைபெற்ற கடையடைப்பு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தி.மு.கவினரும் காவல்துறையினரும் கடைகளை திறக்க சொல்லி மக்களை மிரட்டினர். ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாமல் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திளனர். தீபாவளி, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலின், தேர்தல் சமயத்தில் மட்டும் திருத்தணிக்கு வந்து கையில் வேல் பிடித்தார். தேர்தல் முடிந்ததும் மாறிவிட்டார். ஆபத்து வந்தால் ஆன்மிகத்தை தேடுவது திராவிட இயக்கத்தினருக்கு வழக்கம். ராகுல் பாதயாத்திரை முடிவதற்குள் காங்கிரஸ் கரைந்துவிடும். தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.