மன்னிப்பு கேட்ட மாத்ருபூமி

மாத்ருபூமி பத்திரிகையில், “பீகரத்துடே வைரஸ்” (பயங்கரவாதத்தின் வைரஸ்) என்ற கட்டுரை பிப்ரவரி 27, 2011 முதல் மார்ச் வரையிலான ஐந்து கட்டுரைகளின் தொடராக வெளியானது. அதில், ‘ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் இந்தியாவை விழுங்குமா? என்ற விஷம கட்டுரையை வெளியிட்ட மாத்ருபூமி வார இதழ், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக பொய்யான விஷயங்களை அதில் கூறியது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ் மாநில செயலாளர் பி. கோபாலன்குட்டி மாஸ்டர், இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். இதற்கு பதில் அளித்த மாத்ருபூமி, ‘ஹரியானா பஞ்ச்குலா தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுவாமி அசீமானந்தா சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்தது’ என கூறியது. ஆனால், சுவாமி அசீமானந்தாவின் போலியான அறிக்கை, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ ஆட்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸை இழிவுபடுத்தத் தீட்டப்பட்ட சதித்திட்டமாகும். 2019ம் ஆண்டு சுவாமி அசீமானந்தாவை விடுவித்த நீதிமன்றம், அந்த அறிக்கை உண்மையல்ல, கட்டாயப்படுத்தி அதில் கையெழுத்துப் பெறப்பட்டது என்பதை கண்டறிந்தது. இந்தத் தகவல் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, பத்ரி ரெய்னா என்ற எழுத்தாளர் தனது ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதியதாக மாத்ருபூமி தெரிவித்தது. மாத்ருபூமியின் பதிலை ஏற்க முடியாது என்று கோபாலன்குட்டி மாஸ்டர், எர்ணாகுளம் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தள்ளுபடி செய்யக்கோரி மாத்ருபூமி, கேரள உயர்நீதிமன்றத்தை நாடியது. ஆனால், நீதிமன்றம் அதை நிராகரித்தது. பின்னர் மாத்ருபூமி உச்சநீதிமன்றத்தை நாடியது, ஆனால் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. வழக்கு விசாரணை எர்ணாகுளம் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடர உத்தரவிட்டது. இதற்கிடையில், மாத்ருபூமி தனது கட்டுரை தவறானது என்று ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரி செய்தி வெளியிட்டுள்ளது.