அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்தீப் சிங் மற்றும் ஜஸ்லீன் கவ்வுர், அவர்களது உறவினர் அமன்தீப் சிங் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டனர். இதனையடுத்து மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவி செய்து காணாமல் போனவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஒட்டிய ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அருகிலிருந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்த நபர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கடத்தல் சம்பவம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துவதாக கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக்கொண்ட இந்த சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கொடூரக்கொலை சம்பவம் பஞ்சாப்பில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது அமெரிக்காவில் வாழும் பாரத வம்சாவளியினரிடம் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் சமீப காலமாக பாரதத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக ஹிந்துக்கள் மீதான துவேஷம் அதிகரித்து வருவதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப சமீப காலமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் பாரத மக்கள் மீதான வெறுப்பு நடவடிக்கைகள், தாக்குதல்கள் தொடர்வது கவலையளிக்கிறது.