அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த லேதன் ஜான்சன் என்ற நபர் நகைகளை திருடும் கும்பலை சேர்ந்தவர். இந்த நபர், ஒரு ஹிந்து பெண்ணிடம் நகையை திருடிக்கொண்டு தப்பிச்சென்றார். எனினும், ஜான்சன் சாண்டா கிளாரா காவல் துறை மற்றும் அமெரிக்க மார்ஷல் அலுவலகத்தால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் ஹிந்து பெண்களை, குறிப்பாக 50 முதல் 73 வயதுக்குட்பட்ட, புடவை, நெற்றித் திலகம் அணிந்த ஹிந்து பெண்கள் மற்றும் பிற இன உடைகளை அணிந்திருந்த பெண்களின் நகைகளை திட்டமிட்டு பறித்துள்ளார். அவர்களை கீழேதள்ளி காயப்படுத்தியுள்ளார். இதுபோல சுமார் 14 ஹிந்துப் பெண்களைத் தாக்கி கொள்ளையடித்துள்ளார் என தெரியவந்துள்ளது. திருடப்பட்ட நெக்லஸ்கள் அனைத்தும் தோராயமாக 35,000 டாலர்கள் மதிப்புடையது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கொள்ளை, தாக்குதல் வழக்குகளுடன் அவர் மீது ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. லேதன் ஜான்சனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 63 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.