இளம் இந்தியா புதிய இந்தியா

குஜராத்தின் சுரேந்தர நகரில் உள்ள சி யூ ஷா பல்கலைக் கழகத்தில் “இளம் இந்தியாவுக்கான புத்தம் புதிய இந்தியா – பத்து ஆண்டு காலத்தில் தொழில்நுட்பத்துடன் கூடிய வாய்ப்புகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுடன் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்துரையாடினார். மாணவர்களை கடினமாக உழைத்து அடுத்த பத்து ஆண்டுகளில் குஜராத்தை  தொழில்நுட்பத்தில் சிறந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், “அடுத்த பத்து ஆண்டுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்கி இளைய தலைமுறையினருக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும். ஐ.ஐ.டிக்கள் மட்டுமே புத்தம் புதிய சிந்தனைகளை உருவாக்கும் என்ற எண்ணம் தேவை அற்றதாகிவிடும். அடுத்த மிகப்பெரிய புதிய சிந்தனை யாரிடமிருந்தும், எங்கிருந்தும் வரலாம், குறிப்பிட்ட சில நிறுவனங்களில் இருந்து தான் வரவேண்டிய அவசியம் இல்லை. இளைய தலைமுறையினர், புதிய தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி ஒட்டுமொத்த நாடும் பின்பற்றக்கூடிய வழிகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்களாக உருவெடுத்துவிடுவார்கள். சிறிய வளரும் நகரங்களில் டிஜிட்டல் மயமாக்குதலையும், திறன் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். இந்தியர்கள் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே ஆத்ம நிர்பார் பாரத் என்ற கோஷத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். வரும் காலத்தில் உற்பத்தி துறை முக்கிய பங்காற்றும். இளம் இந்தியாவுக்கான புத்தம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் விளைவாக நாம் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்” என்றார்.