மத்திய பிரதேசத்தில் முதன்முறையாக, அடையாள அட்டைகளை சரிபார்த்த பின்னரே நுழைய அனுமதிக்க வேண்டும் என்று நவராத்திரி கர்பா நடன அமைப்பாளர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சில இடங்களில், கர்பா பந்தல்களுக்கு வெளியே ‘ஹிந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை’ என்ற போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில், அடையாளத்தை மறைத்து தீய நோக்கங்களுடன் கர்பா பந்தல்களுக்குள் நுழைந்ததாக 8 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சில முஸ்லிம் இளைஞர்கள், ஹிந்து பெண்களை வீடியோ, படம்பிடித்து ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களின் நெற்றியில் திலகம் பூசப்படுகிறது. ஆண்கள் குர்தா பைஜாமாவில் மட்டுமே நுழைய முடியும்; பெண்கள் சேலை மற்றும் சல்வார் உடையில் நுழையலாம். ஜீன்ஸ், கால்சட்டை மற்றும் டி சர்ட் அணிந்து மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஒற்றை ஆண்களுக்கும் நுழைய அனுமதி இல்லை. “கடந்த சில காலமாக கர்பா நடனப் பந்தல் லவ் ஜிஹாத்தின் ஊடகமாக மாறிவிட்டது. எனவே, கர்பா பந்தல்களுக்குள் நுழைவது அடையாளச் சரிபார்ப்புக்குப் பின்னரே அனுமதிக்கப்படும். கர்பா நடனம் என்பது தாய் சக்தியை வணங்கி கொண்டாடும் ஹிந்துக்களின் வழிபாட்டு முறை. ஹிந்துப் பெண்களைத் துன்புறுத்தும் தீய நோக்கங்களைக் கொண்டவர்கள் கர்பா பந்தல்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று செப்டம்பர் 8ம் தேதி மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் கூறினார். மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் இதே கருத்தை வலியுறுத்தினார்.