தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் 51 இடங்களில் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதே நாளில் சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் மனித சங்கிலி நடத்தப்போவதாக அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்துள்ளது.
‘மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் அண்மைகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மத்திய அரசால் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக சில முஸ்லிம் அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்துகின்றன. எனவே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களும் அனுமதி அளிக்க இயலாது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்’ என்று கூறியுள்ள தமிழக அரசு, தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம், விசிக மனித சங்கிலி உட்பட அனைத்து அமைப்புகளின் பேரணிகள், நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முறையீடு செய்துள்ளது. இந்த மனு பட்ட்யலிடப்பட்டால் இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தரப்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. எனினும், திருவள்ளூரில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை காவல்துறை நிராகரித்ததால் தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., திருவள்ளூர் எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்ற அவமதிப்பு ‛நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘ஊர்வலம் நடந்தால் பிரச்சனை ஏற்படும் என்ற போலி காரணங்கள் கூறி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேல் மறையீடு செய்திருப்பது முறையான ஒன்று. அதற்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.