அதிசய கோயில்

நவராத்திரியில் ஒன்பது நாட்களுமே அம்பிகைக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், விருந்தினர்கள், நண்பர்களை அழைத்து உபசரிப்பது, தாம்பூலம் கொடுப்பதால் சகல ஐஸ்வர்யங்களும் சிவப்புக் கம்பள விரிப்புடன் நம்மை நாடித் தேடி வர அம்பாள் அனுக்ரஹம் செய்கிறாள். அலுவலகம், வீடு என்று பல இடங்களிலும் சங்கீதம் கற்றோரை அம்பாள் புகழ் பாடச் செய்து விமரிசையாகக் கொண்டாடி பக்தி வெள்ளத்தில் திளைப்பதைப் பார்க்கிறோம் கண்கூடாக. நவராத்திரியில், முப்பெரும் தேவிகளையும் கொண்டாடும் வகையில் கோயில்களில் விதவிதமான பூஜைகள், அலங்காரங்கள், பாட்டுக் கச்சேரிகள் என்று அமர்க்களப்படும்.

கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படும் ஊர் சமயபுரம். இங்கு வீற்றிருக்கும் மாரியம்மன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது இந்த ஊர். இங்கு உலகில் சில நாடுகளிலிருந்தும், பாரதத்தின் வட பகுதிகளிலிருந்தும் கூட பக்தர்கள நவராத்திரி நாட்களில் வந்து வனங்கி அவளது அருளுக்கு பாத்திரமாகிறார்கள். இதேபோல, உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில், கோவில்பட்டி ஷெண்பகவல்லி கோயில், மயிலை கற்பகாம்பாள் என்று அம்பாள் கொலுவிருக்கும் ஆலயங்களுக்கு நவராத்திரி நாட்களில் பக்திபூர்வமாகச் சென்று வழிபடுவதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பாரதத்தில் ஒரு சில கோயில்கள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. அந்த வகையில் வருடத்திற்கு ஒரே ஒரு முறை ஒரே ஒரு நாளில் அதுவும் குறிப்பிட்ட ஐந்து மணி நேரத்திற்கு மட்டுமே திறந்திருக்கும் என்பது தான் ஆச்சரியம். சட்டீஸ்கரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழம்பெரும் கோயில், நிறை மாதா கோயில். இந்த கோயில் திறக்கப்படும் அந்த ஐந்து மணி நேரத்தில் தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடெங்கிலும் இருந்து இங்கே குவிகின்றனர். இந்த ஆலயம் ஒவ்வொரு ஆண்டும் சைத்ர நவராத்ரி அன்று திறக்கப்படுகிறது. அந்நாளில் இயற்கையாகவே இங்கே ஒரு ஒளி பிறக்கிறது, குறிப்பிட்டுச் சொன்னால் அதிகாலை 4 மணி முதல் 9 மணி வரையில் அந்த நவராத்ரி நாளில் இங்கே கோயில் திறக்கப்படுகிறது. கோயில் திறக்கப்படும். இந்தக் கோயிலில் எரியும் விளக்கு எவ்வாறு எரிகிறது என்பதும் புரியாத புதிர். மேலும் அந்த தீபம் நவராத்ரியின் ஒன்பது நாட்களும் எரிகின்றது. இங்கே தேவிக்கு மக்கள் தேங்காயை மட்டும் அர்பணித்து தூபமேற்றி வழிபடுகின்றனர்.

மூன்றாம் நாள்: நவராத்ரி ஒன்பது நாட்களும் அம்பாளை வழிபடும்போது நைவேத்யம் செய்து வழிபடுவது முறை. அதிலும் முதல் இரண்டு நாட்களில், பூஜையை சில சூழ்நிலை காரணங்களால் தவறவிட்டவர்கள், இந்த மூன்றாம் நாளில்கொலு வைத்து, தங்கள் விரதத்தைத் தொடங்கலாம். புதன் கிழமை வாராகிக்கு மிகவும் உகந்த நாள், கடன் தொல்லை நீங்கவும், கண் திருஷ்டி விலகவும், இன்று வாராகியை வீட்டில் வழிபாடு செய்து அர்ச்சனை செய்வது அம்பிகைக்குப் ப்ரீதியைக் கொடுக்கும். மகிஷனை அழித்த ரூபத்தில், அம்பாள் நவராத்திரி மூன்றாம் நாளில் வாராகியாகக் காட்சி தருகிறார். வாராஹியை வந்தனை செய்வோம். பாராமுகத்துடன் வல்வினைகள் அணுகாமல் ஓடி ஒளியும்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி