நவராத்திரி பெருமைகள்

நவ என்றால் ஒன்பது; ராத்ரம் என்றால் மங்கலம். ஒன்பது மங்கலகரமான மாலை வேளைகளில் முறையே அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் நாம் வணங்கினால் பெறப்போகும் நன்மைகள் கணக்கிலடங்கா. மகா விஷ்ணுவான திருமால் மது கைடபர்களை அழிக்கும் நோக்கில்  நவராத்திரி விரதம் இருந்து ஆதிபராசக்தியின் பேரருளை பெற்று மது கைடப வதம் செய்தார். திருப்பதி ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாளைக் கரம் பற்ற எண்ணிய ஸ்ரீ அலமேலு மங்கைத் தாயார், நவராத்திரி விரதம் இருந்து பலன் பெற்றார். நவராத்திரி விரதம் இருந்தே இந்திரன், விருத்திராசுரனை அழித்தான். ராமாயணத்தில் ஸ்ரீராமரும், மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் நவராத்திரி விரதம் இருந்ததார்கள். நவராத்திரி விரத மகிமை உணர்ந்த சிவபிரான், அம்பிகையின் துணையோடு திரிபுரம் எரித்தார். சிவபெருமான் திருநடனம் புரிந்தபோது, அவர் தன் கால் விரல்களால் வரைந்த கோலங்களிலிருந்து நவராத்திரி தேவியர் தோன்றினர் என இதிகாச புராணங்கள் கூறுகின்றன.

ஆங்கரீஸ முனிவரே முதன் முதலில் மண்ணுலகில் நவராத்திரி பூஜையைத் தொடங்கி வைத்து பலருக்கும் நன்மைகள் கிடைக்க வழி செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. அம்பிகையான பராசக்தியை சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சித்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி என்ற பெயர்களில் தசரா   காலங்களில் வழிபடுகிறார்கள். ஒன்பது தேவியருக்கும் வடநாட்டில், குறிப்பாக காசி மாநகரில் கோயில்கள் உள்ளன.

நவராத்திரி முதல் நாள்

இறைவனின் ஆனந்த தாண்டவத்தின்போது, வலக்காலை தரையில் ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் வரையப்பட்ட கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இதை ரிஷிமண்டல கோலம் என்பர். இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. அவற்றுக்குரியவளாக, அந்தக் கோலத்திலிருந்து வெளிப்பட்ட சக்தி சைலபுத்ரி எனப்படுகிறாள். . அன்னையின் முதல் வடிவமான இந்த சைலபுத்ரி. இமவான் மகளாகப் பிறந்து பரமேஸ்வரனைக் குறித்து தவம் மேற்கொண்டு கைலாசநாதனை மணந்தாள். இந்த தேவியானவள் கையில் சூலத்துடன் காளை மாட்டின்மீது அமர்ந்து காட்சித் தருவாள். நவராத்திரியின் முதல் நாளில் இத்தேவியை தரிசிப்பதை மக்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள். இவளை வழிபட ஞான சக்தி கிடைக்கும், மங்களகரமான வாழ்வு கிட்டும்.

 நவராத்ரி இரண்டாம் நாள்

பரமேஸ்வரனின் திரிபுர தாண்டவத்தின்போது, அவர் இடக்கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம் எனப்படும். இதிலிருந்து பிரம்மச்சாரிணி தேவி தோன்றினாள். இவள் வெள்ளை ஆடை அணிந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். நவராத்திரி இரண்டாம் நாள் வழிபடப்படும் ப்ரஹ்மச்சாரிணி  அம்பிகைக்கு ஆபரணங்களை அணிவித்து வழிபட்டால், நீங்காத புகழை வழங்குவாள்  எனச் சொல்லப்படுகிறது. இந்த அம்பிகையை வழிபட மனதில் உறுதி பிறக்கும்; நினைத்த எண்ணங்களையும், நினைத்த காரியங்களையும் சாதிக்கும் சக்தி கிட்டும். இந்த தேவிக்கு காசியில் “துர்க்காகாட்’ படித்துறையில் கோயில் உள்ளது

ஆர் கிருஷ்ணமூர்த்தி