தேச வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு

தஞ்சாவூரில் மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழிலாளர்கள் அமைச்சகம் சார்பில் தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினர் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் பானு பிரதாப்சிங் வர்மா, “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவிகித பங்களிப்பை மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் துறை வழங்குகிறது. 11 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த துறையில் பணி புரிகிறார்கள். தொழில்முனைவோருக்கு முக்கிய பங்கு அளிப்பதுடன் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இத்துறை பெரும் பங்கு வகிக்கிறது. 1.09 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 11.46 லட்சம் நிறுவனங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. ஒரு துடிப்பான தொழில்துறையாக தொழில் முனைவோரின் பாரம்பரியத்தை முன்வைக்கும் வகையில் இது கைவினைப்பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்களில் தனது பங்களிப்பை வழங்கிவருகிறது. வாகன உதிரிபாகங்கள் மற்றும் பழுது நீக்குதல் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், தோல் மற்றும் தோல் பொருட்கள் உட்பட பல சிறு தொழில்களை உள்ளடக்கிய குழுமங்களின் தாயகமாகவும் தமிழகம் உள்ளது. கட்டடக்கலை அற்புதங்கள் நிறைந்த வரலாற்று கோயில்களை உள்ளடக்கிய தமிழகம் மத மற்றும் ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது. மக்களுக்கு தொழில்முனைவு வாய்ப்புகளையும் வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது. சிறு குறு தொழில் துறையின் மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த அற்புதமான வளர்ச்சி காணப்படுகிறது. மத்திய அரசின் திறன் மேம்பாடு, சந்தை இணைப்புகள், நிதி வசதி, டெண்டர் ஏலம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பட்டியலின பழங்குடியின தொழில்முனைவோருக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முதன்மை நோக்கத்துடன் இந்த முனையம் தொடங்கப்பட்டுள்ளது” என கூறினார். மாநாட்டில் தமிழக சிறுகுறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.