போலி பாஸ்போர்ட் வழக்கு

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பாக 41 பேர் மீது ‘கியூ பிராஞ்ச்’ சி.ஐ.டி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, இவ்வழக்கு குறித்து மதுரை வழக்கறிஞர் முருக கணேசன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘இந்த விவகாரத்தில் பாஸ்போர்ட், தபால் துறை, காவல் துறையைச் சேர்ந்த சில அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளது. வழக்கு விசாரணையை சி.பி.ஐ., அல்லது வேறொரு அமைப்பிற்கு மாற்ற வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. தற்போது நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில், “போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கிய சம்பந்தப்பட்ட காலத்தில் மதுரை காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது குறைகாண முடியாது. அவர் சுத்தமானவர் என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இது ஏற்புடையதல்ல. தனி நீதிபதியின் உத்தரவிலுள்ள அப்பகுதியை நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து ‘கியூ பிராஞ்ச்’ சி.ஐ.டி பிரிவினர் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.