ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், முஸ்லிம் சமூகத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம் அறிஞர்கள், கல்வியாளர்கள் பலரை சந்தித்து பேசி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசியை, டெல்லி மசூதியில் சந்தித்து பேசினார். பின்னர் ஆசாத்பூரில் உள்ள மதரசாவுக்கு சென்று அங்கிருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறுகையில், மதரசாவில் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது மோகன் பாகவத்தை, ‘ராஷ்ட்ர பிதா’ என குறிப்பிட்டு, தேசத்தின் தந்தை என இமாம் அவரை பாராட்டினார். இதை ஏற்க மறுத்த பாகவத், ‘தேசத்தின் தந்தை ஒருவரே. நாம் அனைவரும் இந்த தேசத்தின் குழந்தைகள்’ என்றார். மேலும், நம் தேசத்தின் பெருமைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம் வழிபாட்டு முறைகள் வேறாக இருந்தாலும் அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என மாணவர்களிடம் மோகன் பாகவத் தெரிவித்ததாக கூறினார். இது குறித்து, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி கூறுகையில், “மோகன் பாகவத், ராஷ்ட்ர பிதா. நம் நாட்டை பலப்படுத்துவதற்கும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இருவரும் பல விஷயங்களை பேசினோம். என் அழைப்பை ஏற்று மதரசாவுக்கும், மசூதிக்கும் வந்தார். இந்த வருகையின் வாயிலாக, நாட்டை பலப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற செய்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். நம் அனைவருக்கும் நாடு தான் முதன்மையானது. மதமும், வழிபாட்டு முறையும் வெவ்வேறாக இருந்தாலும், நாம் அனைவருக்கும் ஒரே மரபணு தான்” என்று கூறினார். இந்த சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கிருஷ்ண கோபால், ராம் லால், இந்திரேஷ் குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.