ஹிந்து முஸ்லிம் தலைவர்கள் கூட்டறிக்கை

ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை பாரத அணி தோற்கடித்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இங்கிலாந்தின் லீசெஸ்டர் மாநகரில் பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம்கள் பாரத வம்சாவளியினரை குறிப்பாக ஹிந்துக்களை தாக்கினர். ஹிந்துக்களின் வீடு, கடைகள், கோயில்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானியர்கள் தாக்குதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகப் பரவின. இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக 47 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்தில் உள்ள பாரதத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்நிலையில், லீசெஸ்டர் மாநகரில் உள்ள ஹிந்து முஸ்லிம் தலைவர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “நாங்கள் லீசெஸ்டர் மாநகர குடும்ப உறுப்பினர்கள். நாங்கள் சகோதர சகோதரிகள். எங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அந்நிய பயங்கரவாதக் கொள்கைகளுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் லீசெஸ்டரில்ல் இணக்கமாகவே வசித்து வருகிறோம். மாற்று இன வெறுப்பாளர்களை இணைந்தே எதிர்கொண்டோம்; பன்முகத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமையின் கலங்கரை விளக்காக இந்த நகரை இணைந்தே உருவாக்கியுள்ளோம். சமீபத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் வேதனையை அளித்துள்ளன. நாகரிக சமூகத்திற்கு இது ஏற்புடையது அல்ல. அனைத்து மத வழிபாட்டுத்தலங்களின் புனிதத்தைக் காக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.