பாரதத்தில் ஹிஜாப் பிரச்சனையை முன்வைத்து சில முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளின் ஆதரவுடன் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் இப்போது முஸ்லிம் நாடான ஈரானில் உள்ள பெண்கள், ஹிஜாப் தேவையில்லை என போராடத் துவங்கியுள்ளனர். ஈரானில், ஹிஜாம் கொண்டு தலையை சரியாக மறைக்காத காரணத்தால் கைது செய்யப்பட்ட இளம் பெண், காவலர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். ஈரானில் பெண்களுக்கு எதிரான காவல்துறையின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக பல பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டுவதையும், ஹிஜாப்களை எரிப்பதையும் காணமுடிகிறது. அந்த பெண்கள் ஹிஜாபை தங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்ற விரும்புகிறார்கள். இதற்கு சர்வதேச சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஈரானில் ஹிஜாப் அணியாமல் அல்லது திரையை அணியாமல் நடப்பது முஸ்லிம் ஹிஜாப் விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 1979ல் அங்கு நடைபெற்ற முஸ்லிம் மதப் புரட்சிக்குப் பிறகு, ஈரானியச் சட்டம், தேசம் அல்லது மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், அனைத்துப் பெண்களும் தலை மற்றும் கழுத்தை மறைக்கும் ஹிஜாப் அணிய வேண்டும் என கூறுகிறது. இந்த நிர்ப்பந்தம், உலக மக்களிடையே சமீப காலமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனிடையே கட்டாய ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரானில் நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இரண்டு பாரத வீராங்கணைகள் வெளியேறிய சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு:
சௌமியா சுவாமிநாதன்: 2018ல், ஈரானின் ஹமதானில் நடைபெறவிருந்த ஆசிய அணி செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்திய கிராண்ட்மாஸ்டர் சௌமியா சுவாமிநாதன், இந்த கட்டாய ஹிஜாப் கொள்கையின் காரணமாக விலகினார். விளையாட்டு வீரர்களின் தேர்வை கருத்தில் கொள்ள ஈரானிய அதிகாரிகளின் இயலாமையை விமர்சித்த அவர், “அதிகாரப்பூர்வ சாம்பியன்ஷிப்களை ஒதுக்கும்போது அல்லது ஏற்பாடு செய்யும்போது வீரர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் கண்டு நான் ஏமாற்றமடைந்தேன். சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது, எங்கள் தேசிய அணியின் உடை அல்லது ஃபார்மல் உடைகள் அல்லது விளையாட்டு உடைகளை அணிய வேண்டும். ஆனால் விளையாட்டில் மத ஆடைக் குறியீட்டிற்கு நிச்சயமாக இடமில்லை. ஈரானிய கட்டாய ஹிஜாப் சட்டம், எனது கருத்து சுதந்திரம் மற்றும் சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமை உட்பட எனது அடிப்படை மனித உரிமைகளை நேரடியாக மீறுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் ஈரானுக்குச் செல்லாமல் இருப்பதுதான் எனது உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரே வழி என்று தோன்றுகிறது. ஈரானின் சட்ட உரிமைகள் குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அந்த உரிமைகள் எனது மனித உரிமைகளுடன் ஒத்துப்போகாததால், செல்ல வேண்டாம் என முடிவு செய்தேன்” என கூறினார்.
ஹீனா சித்து: 2016ல் பாரத துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து, ஈரானில் நடந்த ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பிலிருந்து இதே காரணத்திற்காக வெளியேறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், நான் புரட்சியாளர் அல்ல, ஆனால் ஒரு விளையாட்டு வீரருக்கு ஹிஜாப் அணிவதைக் கட்டாயமாக்குவது விளையாட்டின் உணர்வில் இல்லை என்று தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். பல்வேறு கலாச்சாரங்கள், பின்னணிகள், பாலினங்கள், சித்தாந்தங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி ஒன்றிணைந்து போட்டியிடுவதால் நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று தெரிவித்தார்.