ஆ. ராசாவுக்கு எதிர்ப்பு

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி ஆ.ராசா ஹிந்துக்கள் பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி, வி.ஹெச்.பி, பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் காவல்துறையில் புகார் அளித்து வருகின்றனர். பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களும் இதர்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், இந்து முன்னணியினர் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி நேற்று காலை நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டன. அன்னூர் வட்டாரத்தில் அனைத்து கடைகளையும் மூடி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அன்னூரில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் ஜெயபால், விவசாய அணி மாவட்ட தலைவர் உள்பட 17 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, தங்கள் மானம் போவதை தடுக்க, அன்னூர் காவல்துறையுடன் இணைந்து தி.மு.கவினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடைகளை திறக்கும்படி மூடப்பட்ட கடை உரிமையாளர்களை வற்புறுத்தினர் என சமூக ஊடகங்களில் மக்கள் புகார் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், ஆ. ரசாவை கண்டித்தும், அவரை எம்.பி பதவியில் இருந்து நீக்கக்கோரியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “ஆ. ராசா தி.மு.கவுக்கு முடிவுரை எழுத கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார். தி.மு.கவை அழிக்க, அக்கட்சிக்குள்ளேயே ராசா தலைமையில் ஒரு குழுவும், செந்தில்பாலாஜி தலைமையில் மற்றொரு குழுவும் செயல்படுகின்றன. ராசாவின் பேச்சை தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உட்பட சிலர் கண்டித்தனர். இதனை வரவேற்கிறோம். தி.மு.க அவரை கண்டிக்கவிட்டால் 2026ல் அது காணாமல் போய்விடும்” என கூறினார்.