மதம் பரப்பிய வங்கதேச பிரஜைகள்

அஸ்ஸாம் காவல்துறை, முஸ்லிம் மதரசாக்களை மையமாகக்கொண்டு இயங்கிவரும் பல ஜிஹாதி பயங்கரவாத குழுக்களை முறியடித்து வரும் நேரத்தில், மாநிலத்தில் சட்டவிரோதமாக முஸ்லிம் மதப் பிரச்சாரம் செய்த 17 வங்கதேச முஸ்லிம்களை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டி நுழையவில்லை, விசா பெற்று சட்டப்பூர்வமாகவே வந்துள்ளனர். இருப்பினும், அவர்கள் சுற்றுலா விசாவில் வந்தவர்கள். சுற்றுலா விசாவில் வந்து இது போல மதப் பிரசங்கங்களை நிகழ்த்துவது விசா விதிமுறைகளை மீறும் செயலாகும். முன்னதாக சில காலம் முன்பு இதேபோல மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவர்கள் அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும் மீண்டும் அவர்கள் இதே காரணத்துக்காக திரும்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில், சையத் அஷ்ரபுல் ஆலம், அன்வர் உசேன், சுஹாக் சவுத்ரி, அசிபுர் ஷேக் மற்றும் மசூத் ராணா ஆகியோர் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மத போதகர் சையத் அஷ்ரப் ஆலம் உள்ளிட்ட 11 பேர் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களது உள்ளூர் புரவலர்களான ஜெஹிருல் ஹக் மற்றும் சம்சுல் அலி ஆகியோரும் 2 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காவலில் இருப்பவர்களிடம் காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இக்குழுவினர் சுற்றுலா விசாவில் பாரதத்துக்குள் நுழைந்து டெல்லி, அஜ்மீர் ஷெரீப் போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்று இதேபோல மத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.