மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நோடல் ஏஜென்சியான சைல்டுலைன் இந்தியாவின் துணை மையத்தின் இயக்குநரான சவிதா டே இந்த சமீபத்திய ஒரு மதமாற்ற மோசடியை முறியடித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், “செப்டம்பர் 12 மாலை டெல்லி ரயில் நிலையத்திலிருந்து தெரியாத இடத்துக்கு சில சிறுமிகளை அழைத்துச் செல்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் அங்கு விரைந்தேன், ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவியுடன் 14 வயது பழங்குடியினப் பெண்ணைக் காப்பாற்றினேன். விசாரணையில், 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஏற்கனவே ஒரு ரயிலில் ஏறியிருந்ததாகவும், 12 பேர் பிபார்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நாக்பூருக்கு ரயிலில் பயணம் செய்யக் காத்திருப்பதாகவும் தெரிந்தது. பின்னர் காவல்துறையினர் பிபார்டியில் உள்ள அந்த வீட்டை சோதனை செய்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 12 சிறுமிகளை மீட்டனர். கிறிஸ்தவ மிஷனரிகளின் ஏஜெண்டான ராம் பரன் ஓரான் அங்கு கைது செய்யப்பட்டார். விசாரணையில், மதமாற்றங்களுக்காக கர்வா மற்றும் ரோஹ்தாஸ் மாவட்டங்களில் மைனர் குழந்தைகளைக் கொண்ட ஏழை பழங்குடியின குடும்பங்களை அடையாளம் காண கிறிஸ்தவ மிஷனரிகள் தன்னை ஈடுபடுத்தியதாக ஓரான் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார்” என தெரிவித்தார். ஜார்கண்டின் கர்வா மாவட்டத்தை சேர்ந்த இந்த கிறிஸ்தவ ஏஜெண்ட், பழங்குடியின கிராமங்களிலிருந்தும் ஏற்கனவே 59 பழங்குடியின சிறுவர், சிறுமிகளை நாக்பூருக்கு அனுப்பியதாகவும் தன்னை போலவே பல ஏஜெண்டுகள் மதமாற்றத்திற்காக ஆள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மிஷனரிகளிடமிருந்து இந்த பணிக்காக கணிசமான தொகையைப் பெறுவதாகவும் தெரிவித்தார். ஓரான் ஏழு ஆண்டுகளாக கிறிஸ்தவ மிஷனரிகளின் முகவராக செயல்பட்டு வருவதாகவும், இதுவரை சில நூறு குழந்தைகளை நாக்பூர் மற்றும் பிற இடங்களில் உள்ள கிறிஸ்தவப் பணிகளுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதமாற்றத்திற்குப் பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு மிஷனரி பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது. அவர்களில் நம்பிக்கைக்குரியவர்கள் பாதிரிகளாக, கன்யாஸ்திரிகளாக பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும், உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறார்கள். ஏழை பழங்குடியினர் தங்கள் குழந்தைகளுக்கான உணவு, உடை, கல்விக்கு மிகவும் சிரமப்படுவதால், அவர்களில் பெரும்பாலோர் இந்த கிறிஸ்தவ முகவர்களுடன் குழந்தைகளை அனுப்ப முன்வருகின்றனர்.