காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியலை கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும்படி, ‘ஜி 23′ என அழைக்கப்படும், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என கருதப்படும் சசி தரூர் சமீபத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். இந்நிலையில் மணீஷ் திவாரி, சசி தரூர், கார்த்தி சிதம்பரம், பிரத்யுத், அப்துல் காலிக் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்.பிக்கள், கட்சியின் தேர்தல் குழு தலைவரான மதுசூதன் மிஸ்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும். இதற்காக வாக்காளர் பட்டியலை வெளியிடும்படி கோரினோம். வாக்காளர்கள் யார், தலைவர் தேர்தலுக்கு போட்டியிட உள்ளவரை பரிந்துரைப்பது யார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இதனை கோரினோம். மனு தாக்கல் துவங்குவதற்கு முன் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்” என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுவோர், வரும் 20ம் தேதி முதல், கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து வாக்காளர் விபரங்களை அறிந்து கொள்ளலாம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.