பாரதியாரின் தமிழ்பற்று

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கெடுபிடியால் பாரதியார் சில காலம் புதுவையில் தங்கியிருந்தார். அவரின் தேசபக்தி, கவிப்புலமை பற்றிக் கேள்விப்பட்ட வ.ராமசாமி என்பவர் பாரதியை சந்திக்க விரும்பினார். பாரதியின் வீட்‌டுக்குச் சென்றார். பாரதியாரைப் பார்த்தவுடன் வ. ராமசாமி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். அவரைத் தூக்கி நிறுத்திய பாரதி “ஐயா, நீங்கள் யார்?”  என்று கேட்டார். அதற்கு ராமசாமி தமிழிலேயே பதில் சொல்லியிருக்கலாம். மாறாக அவர் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர் என்பதால் ஆங்கிலத்தில் பேசத் துவங்கிவிட்டார். அவர் ஆங்கிலத்தில் பேசியதை சற்றும் விரும்பாத பாரதி, “அடே…..பாலு, உன்னைப் போல இவரும் அருமையா இங்கிலிஷ் பேசுகிறார். அவரிடம் நீயே பேசு…… எனக்கு வேலையில்லை” என்று சற்று கோபத்துடன் பேசினார்.

“ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்?” என்றார் பாரதி. “வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ  வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ”  என்று தமிழ் மொழி அறியாத தமிழரைச் சாடுகிறார். தன் தவற்றை உணர்ந்த ராமசாமி மன்னிப்புக் கேட்டார். இந்த ராமசாமிதான் சுருக்கமாக ‘வ.ரா’ என்று அழைக்கப்படும் சிறந்த தமிழ் எழுத்தாளர். பிறகு பாரதிக்கு நல்ல நண்பராகிறார். பாரதி வரலாற்றை பலர் எழுதியிருக்கிறார்கள். அதில் வ.ரா எழுதிய ‘மகாகவி பாரதியார்’ என்ற புத்தகம்தான் மிகச் சிறப்பானது.

பாரதியாரின் நினைவு தினம் இன்று