கொரோனாவில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருந்து இரண்டு ஆன்டிபாடிகளை இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். இது ஓமிக்ரான் உட்பட சார்ஸ் கோவ் 2ன் அனைத்து வித கொரோனா வைரஸ் திரிபுகளையும் 95 சதவீத செயல்திறனுடன் சரிசெய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். டெல் அவிவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் குழு, “இந்த ஆன்டிபாடிகள் மூலம் துல்லியமான சிகிச்சை மற்றும் அதிக செறிவுகளில் அவை உடலுக்கு வழங்குவது தடுப்பூசிகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக செயல்படும். குறிப்பாக ஆபத்தில் உள்ள மக்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்தது. மேலும், இதனால் மீண்டும் மீண்டும் பூஸ்டர் டோஸ் மருந்துகளை வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது” என தெரிவித்துள்ளனர். கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கோவிட்-19 நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் அக்டோபர் 2020ல் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆராய்ச்சியின் தொடர்ச்சியாகும். அந்த நேரத்தில், இக்குழு இஸ்ரேலில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்திலிருந்து அனைத்து பி நோயெதிர்ப்பு அமைப்பு செல்களையும் வரிசைப்படுத்தியது, மேலும் நோயாளிகள் உற்பத்தி செய்த ஒன்பது ஆன்டிபாடிகளை தனிமைப்படுத்தியது.