ரோஹிங்கியாக்களை திருப்பியனுப்ப வேண்டும்

வங்கதேச பிரதமரின் பாரதப் பயணம் குறித்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா, “பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தண்ணீர், வர்த்தகம், பொருளாதார உறவுகள் மற்றும் இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தினர்” என்றார். ரோஹிங்கியா விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு உணவளிக்க வங்க தேசத்திற்கு உதவும் வகையில் பாரதம் நிவாரணப் பொருட்களை வங்கதேசத்திற்கு அனுப்பியுள்ளது. ரோஹிங்கியா விவகாரம் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் வங்கதேசத்தின் பங்குக்கு உலக அளவில் பாராட்டத்தக்கது. நாங்கள் நிதி உதவியும் செய்துள்ளோம். எதிர்காலத்தில், தேவைப்படும் உதவிகளையும் பாரதம் வழங்கும். மியான்மருக்கு ரோஹிங்கியாக்களை பாதுகாப்பாக விரைவாக திருப்பி அனுப்பப்படுவதை உறுதி செய்யும் அனைத்து முயற்சிகளையும் பாரதம் ஆதரிக்கிறது” என்று கூறினார். மேலும், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் குறித்து, குவாத்ரா கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையே இதுகுறித்து தொடர்ந்து உரையாடல் நடைபெற்று வருவதாகவும், சிறுபான்மையினரின் பாதுகாப்பில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாக வங்கதேச அரசு தனிப்பட்ட முறையில் மற்றும் பொதுவெளியில் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.