அற்புதமான எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் இயக்கவுள்ளார் என்று செய்தி வெளியானபோதே கல்கி நாவலின் ஆழத்தையும் அற்புதத்தையும் நுணுக்கத்தையும் காட்டாமல் அப்படத்தை மணிரத்தினம் சொதப்பிவிடுவார் என சர்ச்சைகள் எழுந்தன. இந்த சூழலில், மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் பல்வேறு சர்ச்சைகளையும் அது உண்டாக்கியுள்ளது. படம் பிரம்மாண்டமாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த பிரம்மாண்டத்தில் இயக்குனர் ராஜமௌலியின் சாயல் தெரிவதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த டிரெய்லரில், வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் குதிரை வண்டியில் செல்லும்போது அம்புகளால் தாக்கப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட டிரெய்லர்களில் நாராயணா என்று ஆழ்வார்க்கடியான் சொல்கிறார். ஆனால், தமிழ் மொழியில் மட்டும் ‘ஐயய்யோ’ என மாற்றம் செய்திருப்பது விமர்சனத்தை எழுப்பியுள்ளது. மேலும் தமிழ் மன்னர்கள் எந்தளவு ஹிந்து தர்மத்தை கடைபிடித்தார்கள் என்பதை காட்டாமல் மறைத்துள்ளார் மணிரத்தினம். பொதுவாக நமது மன்னர்கள் பயன்படுத்திய வாள்கள் பிறை வடிவத்தில் இருக்கும். ஆனால், இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் பல வாள்கள் ஆங்கிலேய, கிரேக்க வாள்களை ஒத்துள்ளது. படத்தில் காட்டப்படும் சிம்மாசனம், உடைகள், கப்பல்கள் போன்றவையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பயன்படுத்தியதைபோல தெரியவில்லை. ஏதோ ஆங்கிலேய, கிரேக்க படத்தின் ஹாலிவுட் சாயலாகவே தெரிகிறது. படத்தில் பலருக்கு வைக்கிங் போல உடை, ஒப்பனைகள் தரப்பட்டுள்ளன. (வைக்கிங் என்பவர்கள் 8 முதல் 11ம் நூற்றாண்டுகளில் வடமேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் போரிட்டு குடியேறிய ஸ்காண்டிநேவிய காட்டுமிராண்டி கடற்கொள்ளையர்கள் என கூறலாம்). போரில் பயன்படுத்தப்படும் கொடிகள் மஞ்சள், சிகப்பு வண்ணங்களில் உள்ளதே தவிர அக்கால அரசர்கள் உண்மையில் பயன்படுத்திய காவி வண்ணம் இடம்பெறவில்லை. இந்த டிரைலரில் இப்படி பல குறைகள் உள்ளதாக சமூக ஊடகங்களில் மக்கள் கூறி வருகின்றனர். திரைப்படம் வெளியாகும்போதுதான் பிரம்மாண்டம் என்ற பெயரில் மிக அற்புதமான பொன்னியின் செல்வன் கதையில் எவ்வளவு சொதப்பல்கள் செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவரும்.