படம் முழுமையாக வெளியாகுமா?

கேரள பா.ஜ.க தலைவர்களில் ஒருவரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான ராமசிம்மன் (முன்னர் அலி அக்பர்) 1920களில் நடைபெற்ற கொடூர மலபார் ஹிந்து இனப் படுகொலையை அடிப்படையாகக் கொண்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான “1921 – புழா முதல்புழா வரே” (1921 – நதி முதல் நதி வரை) என்ற திரைப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் வெளியிட திணறி வருகிறார்.

சுதந்திர போராட்டம், கிலாபத் இயக்கம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த மலபார் ஹிந்து இனப் படுகொலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான ஹிந்துக்களின் மனிதாபிமானமற்ற படுகொலை, ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை முஸ்லிம்மாக மாற்றுதல், ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் போன்றவை நடைபெற்றன. இதற்கு தலைமை தாங்கிய முஸ்லிம் கலகக்காரர் வாரியங்குனத்து குஞ்சஹம்மது ஹாஜியை சுதந்திர போராட்ட வீரராக காட்ட தற்போது வரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தனிக்கதை.

ராமசிம்மன் இந்த படத்திற்காக ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தனித்துவமான பாணியில் முன்னெடுத்தார். திரைப்படத்திற்காக ஒரு தயாரிப்பாளரை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. பொது மக்களிடமிருந்து முதலீடுகளை கோரினார். மக்களும் மனமுவந்து நிதியளித்தனர்.

படத்தை ராமசிம்மன் எடுத்து முடித்துவிட்டார். ஆனாலும், தணிக்கை வாரியத்தின் நியாயமற்ற மற்றும் முரட்டுத்தனமான தடைகள், தொந்தரவுகளால் ராமசிம்மனின் கனவு திட்டமான இந்த திரைப்படம் இன்னமும் கனவாகவே உள்ளது.

அரசியல் காரணங்களால் மலையாளத் திரைப்படத் தணிக்கை வாரியம் அவருக்குத் திரையிடுவதற்கான சான்றிதழை வழங்கவில்லை. இதனால் மும்பையில் உள்ள ரிவைசிங் கமிட்டியின் முடிவுக்காக படம் சென்றது. மும்பையில், ஒன்பது பேர் கொண்ட அணி, படத்தைப் பார்த்துவிட்டு படத்தில் பத்து பேர் தலை துண்டிக்கப்பட்டு துவூர் கிணற்றில் வீசப்படும் காட்சியை 3 அல்லது 4 பேராக குறைக்க வேண்டும் என்றனர். ஆனால், வரலாற்றுபடி நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் தலை துண்டிக்கப்பட்டு அந்த கிணற்றுக்குள் வீசப்பட்டனர்.

முஸ்லிம் ஜிஹாதிகள் ஒரு கன்றுக்குட்டியைக் கொன்று, அதை துண்டு துண்டாக வெட்டி, சமைத்து நம்பூதிரி பிராமணர்களுக்கு பலவந்தமாக உணவளித்து, ஹிந்துப் பெண்களை முஸ்லீம் பெண்களைப் போல உடை உடுத்தும்படி வற்புறுத்தும் காட்சியில் மாட்டிறைச்சி வெட்டும் காலத்தை குறைக்க வேண்டும், படத்துக்கு “ஏ” சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு மறு திருத்தக் குழுவிடம் படம் மீண்டும் சென்றது. அக்குழுவினர், ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் வாரியங்குனத்து குஞ்சஹம்மது ஹாஜி மலபாரில் முஸ்லிம் ராஜ்ஜியத்தை நிறுவிய காட்சிகளை நீக்க வேண்டும். ஒரு சில குர்ஆன் மேற்கோள் வசனங்களை நீக்க வேண்டும், இயக்குனர் ராமசிம்மன் தனது அசல் பெயரான ‘அலி அக்பர்’ என்பதையே படத்தில் பயன்படுத்த வேண்டும், கதாபாத்திரங்கள் கற்பனையானவை என்று ஆரம்பத்தில் கூறப்பட வேண்டும், பல்வேறு வசனங்களை நீக்க வேண்டும், மாற்ற வேண்டும் என பத்துக்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்த உண்மையான வரலாற்று திரைப்படம் குறித்த பிரச்சனையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமசிம்மன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். எந்த சமரசமும் இல்லாமல் உண்மையான உண்மைகளுடன் படத்தை வெளியிட சட்டப்பூர்வ தீர்வு காண அவர் காத்திருக்கிறார்.