பிரபல கார் மற்றும் பைக் ரேஸ் வீராங்கனையான அலிஷா அப்துல்லா பா.ஜ.கவில் இணைந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, வி.பி.துரைசாமி மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் முன்னிலையில் அலிஷா அப்துல்லா பா.ஜ.கவில் இணைந்தார். பா.ஜ.கவில் இணைந்தது குறித்து அலிஷா அப்துல்லா டுவிட்டரில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவருடைய பதிவில், “தமிழக பா.ஜ.க குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே நான் பா.ஜ.கவில் இணைந்திருக்கிறேன். பா.ஜ.கவில் இருந்து பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் இயன்றதை செய்வேன்” என்று உறுதியளித்துள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், “விளையாடுத்துறையின் உண்மையான ஜாம்பவான், அற்புதமான வீரர், அலிஷா அப்துல்லாவை பா.ஜ.கவுக்கு வரவேற்பதில் மகிழ்கிறேன். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த விளையாட்டுத் துறையில் தடைகளை உடைத்து ஊக்கமளிக்கும் பெண்ணாக விளங்குவது மட்டுமின்றி, முத்திரையும் பதித்துள்ளார். விளையாட்டுத் துறைக்கு பிரதமர் மோடி ஆற்றி வரும் பணிகளைக் கண்டு அவர் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.’ என்று குறிப்பிட்டுள்ளார். கார், பைக் பந்தயங்களில் பாரதத்திலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்ற அலிஷா பல்வேறு பந்தயங்களில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இரும்புக்குதிரை, சைத்தான் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிரபல பைக், கார் ரேஸ் வீரரும் புகழ்பெற்ற நடிகருமான அஜித் குடும்பமும் இவரது குடும்பமும் மிகவும் நெருக்கம் என கூறப்படுகிறது.