வெற்றி யாருக்கு?

பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்றார். சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அவ்வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் முன்னாள் நிதியமைச்சரும் பாரத வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவு அமைச்சரான லிஸ் ட்ரஸ் ஆகியோர் உள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் 2 லட்சம் பேர்வரை வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். வாக்குப் பதிவின்போது கன்சர்வேடிவ் கட்சியின் பல உறுப்பினர்களுக்கு இருவர் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்துள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் இறுதி முடிவுகள் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. லிஸ் ட்ரஸ் வெல்லும் பட்சத்தில் அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்று ரிஷி சுனக் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.