முதல் மெய்நிகர் பள்ளி எது?

டெல்லியில் மெய் நிகர் பள்ளி தொடங்கப்பட்டது. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இந்த பள்ளியை தொடங்கி வைத்தார். “இந்த திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வராமலேயே மாணவர்கள் பாடங்களை படிக்க முடியும். தொலைதூரத்திலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வசதியாக இது இருக்கும். முதல்முறையாக துவங்கப்பட்டுள்ள இந்த பள்ளி டெல்லி மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் இப்பள்ளியில் 9ம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டப்படும்” என கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்நிலையில், பாரதத்தின் முதல் மெய்நிகர் பள்ளி மத்திய அரசால் தொடங்கப்பட்டது என்றும், டெல்லி அரசால் அல்ல என தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனம் (என் ஐ ஓ எஸ்) வெளியிட்ட அறிக்கையில், பாரதத்தின் முதல் மெய்நிகர் பள்ளி கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய கல்வித்துறை அமைச்சர் அதனை துவக்கின் வைத்தார். அதன்படி தற்போது, 7,000க்கும் மேற்பட்ட கல்வி மையங்கள் ‘என்.ஐ.ஓ.எஸ்’ உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அர்ப்பணிப்புடன் கல்வியை வழங்குகின்றன. என்.ஐ.ஓ.எஸ்’இன் மெய்நிகர் திறந்தநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 1,500க்கும் மேற்பட்ட மையங்கள் திறன் அடிப்படையிலான தொழிற்கல்வி படிப்புகளையும் வழங்குகின்றன. இந்த மையங்களால் நேரடி வகுப்புகள் நடத்தப்படும். மெய்நிகர் திறந்தநிலைப் பள்ளியின் கீழ் 2021ம் கல்வியாண்டில், 2.18 லட்சம் வீட்டுப் பாடங்கள் மாணவர்களால் பதிவேற்றப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.