முழ்கி வரும் கப்பலான காங்கிரஸ் கட்சி, கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ம் தேதி தொடங்க உள்ள 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள ‘பாரத் ஜோடோ’ (பாரதத்தை ஒன்றிணைப்போம்) யாத்திரையை ஆன்மீக பயணம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ‘மைல் கதம், ஜூட் வதன்’ (ஒன்றாக வாருங்கள், தேசத்தை ஒன்றிணைப்போம்) என்ற முழக்கத்துடன் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், செல்வச் செறிவு போன்ற பிரச்சனைகளை முன்நிலைப்படுத்த உள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சி அதன் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் அதன் குறைபாடுகளை மேலோட்டமான, ஒப்பனை தீர்வுகள் மூலம் குணப்படுத்தும் முயற்சியே இது. தேசிய முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் குறித்த அதன் சமீபத்திய அறிக்கைகள் இந்த யாத்திரையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே வெளிப்படுத்திவிட்டது.
அதற்கான சில காரணங்கள்:
- பிரிவினைவாத கருத்துகள்: பாரதத்தை ஒன்றினைப்போம் என கூறும் இதே ராகுல்தான் ‘ பாரதம் என்பது ஒரு நாடு அல்ல அது மாநிலங்களின் ஒன்றியம். இது ஒரு கூட்டாண்மை, ஒரு ராஜ்ஜியம் அல்ல. இதனை தனிப்பட்ட ஒருவர் ஆளமுடியாது என இந்த ஆண்டு பிப்ரவரியில், நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், தன்னுடைய சொந்த கருத்துக்கும் தனது கூட்டணியில் உள்ள தி.மு.கவின் கருத்துக்கும் மாறாக, தற்போது பாரதத்தை ஒன்றிணைப்பதாக கூறியுள்ளார். மேலும், சுதந்திரமடைந்த ஆரம்ப ஆண்டுகளில் பாரதத்தின் ஒற்றுமைக்காக தனது சொந்தக் கட்சியை சேர்ந்த சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் பாடுபட்டதையும் இதில் அவர்களின் மகத்தான, பங்களிப்பையும் பற்றிய புரிதல் ராகுலுக்கு இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
- வடக்கு தெற்கு பிரிவினை வாதம்: பிப்ரவரி 2021ல், திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல், 15 ஆண்டுகளாக வட பாரதத்தில் எம்.பி.யாக இருந்த நான் வேறு வகையான அரசியலுக்கு பழகிவிட்டேன். கேரளாவுக்கு வந்தது புத்துணர்ச்சியாக உள்ளது. இங்கு மக்கள் பிரச்சினைகளில் மேலோட்டமாக மட்டுமில்லாமல் ஆழமாகவும் விரிவாகவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என கேரள மக்களை பாராட்டுவதை போன்று இதுவரை அவரது கட்சியை ஆதரித்து வந்த வட பாரத மக்களின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக கேலி செய்தார். மேலும், பிப்ரவரியில், நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல், “நீங்கள் (பா.ஜ.க) உங்கள் வாழ்நாளில் ஒருபோதும், தமிழக மக்களை ஆட்சி செய்ய மாட்டீர்கள். அதைச் செய்ய முடியாது” என்று கூறினார். இது போன்ற குதர்க்கமான அரசியல் நிலைப்பாடுகளுடன், பாரதத்தை ஒன்றிணைக்க அவரது கட்சியால் எப்படி முடியும்?
- முடிவில்லா போலி மதச்சார்பின்மை: நேரு காலம் முதல் காங்கிரஸ் பின்பற்றி வரும் போலி மதசார்பின்மை பாரதத்தை ஒன்றிணைக்க அவர்களால் எப்படி முடியும் என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பியுள்ளது.
- ஹிந்துக்களை கேலி செய்தல்: ஹிந்துக்களையும் அவர்களின் ஹிந்துத்துவத்தையும் காங்கிரஸ் தொடர்ந்து கேலி செய்தும் சிறுமைப்படுத்தியும் வருகிறது. ஹிந்து தீவிரவாதம் என்று அழைக்கிறது. சல்மான் குர்ஷித், ஹிந்துத்துவாவை ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பிற ஜிகாதி அமைப்புகளின் சித்தாந்தத்துடன் சமப்படுத்தி பேசியுள்ளார். பசு வழிபாடு என்ற ஹிந்துக்கள் புனிதமாக வழிபாட்டை சிறுமைப்படுத்த 2017ல் கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு கன்றுக்குட்டியை பொது இடத்தில் அறுத்து அதன் இறைச்சியை மாட்டிறைச்சி திருவிழாவில் விநியோகித்தனர். இவர்கள் எப்படி நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களையும் மற்ற மதத்தினரையும் ஒருங்கிணைத்து பாரதத்தை ஒன்றிணைப்பார்கள்?
- தகுதியை புறக்கணித்தல்: பாரதத்தின் பழமையான அரசியல் கட்சியான காங்கிரஸ், நேரு குடும்பத்தின் பிடியில்தான் இன்றளவும் சிக்குயுள்ளது. இவர்களால் மூத்தவர்களும் திறமைசாலிகளும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இதனால், ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். அவர்களையே ஒருங்கிணைக்க முடியாத இவர்கள் எப்படி தேசத்தை ஒன்றிணைப்பார்கள்?
- பொருந்தா கூட்டாளிகள்: ராகுல் காந்தி தனது உத்தேச யாத்திரையின் விவரங்களை இறுதி செய்வதற்கு பெரும்பாலான அரசியல்வாதிகள் தவிர்க்கும் இடதுசாரி மனோபாவம் கொண்ட என்.ஜி.ஓ கூட்டத்தினரை தான் நம்பியுள்ளார். உதாரணமாக, யோகேந்திர யாதவ், பிஜி கோல்சே பாட்டீல், அருணா ராய், சயீதா ஹமீத் என சிலரை சொல்லலாம். ஒன்பது வருட தொடர் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும், நடைமுறை அரசியலில் சிறிதும் அனுபவமும் இல்லாத என்.ஜி.ஓ கூட்டத்தின் ஆலோசனையையும் ஆதரவையும் ராகுல் காந்தி இன்னும் எதிர்பார்க்கிறார். லால் சலாம் சொல்லும் அவர்கள் வந்தே மாதரத்தை ஒருகாலும் ஏற்கப்போவதில்லை. ஆனால், பாரதத்தை ஒன்றிணைக்க அவர்களைதான் ராகுல் நம்பியுள்ளார்.
இத்தகைய செயல்பாடுகள் மூலம், ராகுல் நடத்த திட்டமிட்டுள்ள ‘பாரத் ஜோடோ’ (பாரதத்தை ஒன்றிணைப்போம்) என்ற யாத்திரை உண்மையில் வெற்றியடையுமா இதனால் காங்கிரசுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நாட்டின் மக்களுக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.